அல்லாஹ் கூறுகின்றான் : ஆதமுடைய மகனின் அமல்கள் அனைத்தும் அவனுக்குரியதாகும். நோன்பைத் தவிர. ஏனெனில் அது…

அல்லாஹ் கூறுகின்றான் : ஆதமுடைய மகனின் அமல்கள் அனைத்தும் அவனுக்குரியதாகும். நோன்பைத் தவிர. ஏனெனில் அது எனக்குரியதாகும். அதற்கு நானே கூலி வழங்குவேன்

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ் கூறுகின்றான் : ஆதமுடைய மகனின் அமல்கள் அனைத்தும் அவனுக்குரியதாகும். நோன்பைத் தவிர. ஏனெனில் அது எனக்குரியதாகும். அதற்கு நானே கூலி வழங்குவேன். நோன்பு ஒரு கேடயமாகும். உங்கள் ஒருவருடைய நோன்பு தினமாக இருந்தால், அவர் கெட்டவார்த்தைகள் பேசவேண்டாம், வீணாக சப்தமிடவேண்டாம். யாராவது அவருக்கு ஏசினால், அல்லது சண்டைக்கு வந்தால் 'நான் நோன்பாளி' என்று கூறிவிடட்டும். முஹம்மதுடைய உயிர் எவன் கைவசம் உள்ளதோ, அவன் மீது சத்தியமாக! நோன்பாளியின் வாயில் இருந்து வரும் வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட வாசமானது. ஒரு நோன்பாளி சந்தோசப்படும் இரு சந்தோசங்கள் உள்ளன: அவன் நோன்பு திறக்கும் போது சந்தோசப்படுவான். தனது ரப்பை சந்திக்கும் போது, தனது நோன்பை நினைத்து சந்தோசப்படுவான்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

அல்லாஹ் தஆலா ஹதீஸ் குத்ஸியில் பின்வருமாறு கூறுவதாக நபியவர்கள் அறிவிக்கின்றார்கள் : ஆதமுடைய மகனின் அனைத்து அமல்களும், பத்து மடங்கு தொடக்கம் எழுநூறு மடங்கு வரை பன்மடங்காக்கப்படும். நோன்பைத் தவிர. ஏனெனில், அதில் முகஸ்துதி வர வாய்ப்பில்லை என்பதால், அது எனக்கே உரியது. அதற்கு நானே கூலி வழங்குவேன். அதற்கான கூலியின் அளவு மற்றும் அதன் நன்மைகள் பன்மடங்காக்கப் படுவது பற்றிய அறிவு என்னிடமே உள்ளது. பின்பு அல்லாஹ் கூறுகின்றான் : நோன்பு ஒரு கேடயமாகும். அதாவது, நரகை விட்டும் பாதுகாக்கும் திரையாகவும், பலமான கோட்டையாகவும் அது இருக்கும். ஏனெனில், நோன்பு என்பது இச்சைகளையும், பாவத்தில் வீழ்வதையும் தவிர்ப்பதாகும். நரகம் இச்சைகளாலேயே சூழப்பட்டுள்ளது. உங்களில் ஒருவர் நோன்புடைய தினத்தில் இருந்தால், அவர் முற்றாகவே கெட்ட வார்த்தைகளைப் பேசவேண்டாம். (இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள 'ரபஸ்' என்ற வார்த்தைக்கு, 'உடலுறவிலோ, அதற்குத் தூண்டக்கூடியவற்றிலோ ஈடுபடவேண்டாம்' என்ற அர்த்தமும் உள்ளது. அவர் (இரைச்சல்கள், தர்க்கங்கள் என்பவற்றின் மூலம்) சப்தமிடவும் வேண்டாம். ரமழானில் (யாராவது அவரை ஏசினால், அல்லது சண்டைக்கு வந்தால்) நான் நோன்பாளி எனக் கூறிவிடட்டும். அப்போது அவர் சிலவேளை தவிர்ந்து கொள்வார். அவர் உண்மையிலேயே சண்டையிடுவதிலேயே விடாப்பிடியாக இருந்தால், அத்துமீறுபவர்களைத் தடுப்பது போன்று, இலகுவான படிமுறைகளைக் கடைப்பிடித்துத் தடுக்கட்டும். பின்பு நபியவர்கள், நோன்பின் காரணமாக நோன்பாளியின் வாயில் ஏற்படும் மாற்றமான வாடை, ஜும்ஆக்களிலும், திக்ருடைய சபைகளிலும் பூசிக்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்ட, உங்களிடமுள்ள கஸ்தூரியின் வாடையை விட மறுமையில் மணமானதாகவும், சிறந்த கூலியைத் தரக்கூடியதாகவும் இருக்கும் என அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து சொல்கின்றார்கள். நோன்பாளிக்கு மகிழ்ச்சியைத் தரும் இரு சந்தோசங்கள் உள்ளன : நோன்பு துறக்க அனுமதிக்கப்பட்டுள்ள நேரத்தில் அவன் நோன்பு துறக்கும் போது, பசி மாற்றும் தாகம் நீங்குவது கொண்டும், அவனது வணக்கம் பூரணமடைந்து, நோன்பு நிறைவடைந்ததாலும், இறைவன் புறத்தில் இருந்து வந்த அந்த இலகுபடுத்தலாலும், அது அடுத்த நோன்புகளைப் பிடிக்க உதவியாக இருப்பதாலும் அவன் சந்தோசப்படுகின்றான். அவன் தனது ரப்பைச் சந்தித்தால், தனது நோன்பைக்கொண்டு (அதாவது அதற்கான கூலியைக் கொண்டு) அவன் சந்தோசப்படுவான்.

فوائد الحديث

நோன்பின் சிறப்பு. அதாவது, அது நோன்பாளியை உலகில் இச்சையை விட்டும், மறுமையில் நரகநெருப்பை விட்டும் பாதுகாக்கின்றது.

கெட்ட, தவறான பேச்சுக்களை விட்டுவிடுதல், மக்களது நோவினைகளை சகித்துக்கொள்ளல், அவர்களது தொந்தரவுகளை பொறுமையாலும், உபகாரம் புரிவதாலும் எதிர்கொள்ளல் என்பன நோன்பின் சில ஒழுக்கங்களாகும்.

ஒரு நோன்பாளியோ, வணக்கவாளியோ தன்னுடைய வணக்கத்தை முழமையாக நிறைவேற்றிவிட்டதை நினைத்து சந்தோசப்படுவது மறுமையில் அவனுக்குள்ள கூலியில் குறைவை ஏற்படுத்தமாட்டாது.

முழுமையான சந்தோசம் என்பது, அல்லாஹ்வை சந்தித்து, பொறுமையாளிகளுக்கும், நோன்பாளிகளுக்கும், கூலிகள் மட்டின்றி நிரப்பமாக வழங்கப்படும் போதே கிடைக்கும்.

தேவை மற்றம் நலன்களைக் கருத்திற்கொண்டு, வணக்கங்களை மக்களுக்கு அறிவிப்பது முகஸ்துதியல்ல. ஏனெனில் நபியவர்கள் 'நான் நோன்பாளி' என்று கூறுமாறு ஏவியுள்ளார்கள்.

யாரது உறுப்புக்கள் பாவங்களை விட்டும், நாவு பொய் மற்றும் கெட்ட, பொய்யான வார்த்தைகளை விட்டும், வயிறு உணவு மற்றும் பானங்களை விட்டும் நோன்பு நோற்கின்றதோ அவர் தான் பரிபூரணமான நோன்பாளியாகும்.

வீண் இரைச்சல்கள், சப்தங்கள் போன்றவை நோன்புடைய நிலையில் மிக உறுதியாகத் தடுக்கப்படுகின்றன. ஏனெனில், நோன்பாளி அல்லாதவர்களும் அதைவிட்டும் தடுக்கப்பட்டவர்கள் தான்.

இந்த ஹதீஸ், நபியவர்கள் தனது ரப்பைத் தொட்டும் அறிவிக்கும் ஒரு ஹதீஸாகும். இதற்கு, 'அல்ஹதீஸுல் குத்ஸீ, அல்லது அல்ஹதீஸுல் இலாஹீ' எனப்படும். இதன் அர்த்தம், வார்த்தைகள் அனைத்துமே அல்லாஹ்வுடையதாகும். ஆனாலும், அல்குர்ஆனுக்கு மாத்திரம் உள்ள தனித்துவங்களாகிய, ஒதுவது வணக்கமாகக் கொள்ளப்படல், சுத்தம் பேணிக்கொள்ளல், அற்புதத் தன்மை போன்ற எதுவும் இதற்குக் கிடையாது.

التصنيفات

நோன்பின் சிறப்பு